சென்னை புறநகர் பகுதி, வண்டலூர் என்றால் எல்லோருக்கும் தெரியும், காட்டுக்குள் ஒரு வன உயிரின பூங்கா. அதை ஒட்டி கிழக்கே, கேளம்பாக்கம் செல்லும் சாலை, அதன் வழியே சென்றால் கண்டிகை எனும் கிராமம், அங்கிருந்து வடக்காக 2 கிலோமீட்டர் சென்றால் கண்டிகை – பொன்மார் இணைப்புச் சாலையில் நம் திருவேங்கடவனுக்கு பிரியமான ஓர் ஊர். அதன் பெயர் கேட்டால் ஆச்சரியத்தில் முழ்கி போவீர்கள், ஊரின் பெயர் வேங்கட மங்கலம் ! அதாவது வேங்கடவன் மங்கலம் புரியும் இடம் என்பதாகும்.
சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் அது நீர் நிரம்பி பார்ப்போர் கண்களுக்கு ரம்மியமாக இருக்கும் ,பரந்து,விரிந்து விழுதுகள் பல ஊன்றி, நான் பல நுறு ஆண்டுகளாக இங்கு நின்றுகொண்டு இருக்கிறேன் என்று சொல்வதுபோல் நின்றிருக்கும் ஆலமரம் , ஆலமரத்தின் வயது 3௦௦ ஆண்டுகளுக்கு மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
திருப்பதி என்று சொல்லக் கூடிய (திரு - என்றால் லக்ஷ்மியை குறிக்கும், பதி - என்றால் கணவனை குறிக்கும். திருப்பதி என்பது லக்ஷ்மியின் கணவன் உறையும் இடம் என்பதை குறிக்கும்.) ஏழுமலைகள் சூழ்ந்த இடத்தில் கோயில் கொண்டு ஸ்ரீனிவாசன் என்ற திரு நாமத்துடன் சேவை சாதிக்கும் வேங்கடவன், தன் கருணை பிரவாகத்தால் திருவேங்கடமங்கலம் எனும் ஊரில் கோவில் கொண்டு அருள்வழங்க ஆசைபட்டதன் தொடக்கமாக! மேடவாக்கம், விஜயநகரம் கிராமத்தை பூர்விகமாக கொண்ட திரு. அர்ஜுன் என்கின்ற கோவிந்தராஜன் அவர்தன் கனவில், தனக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று வேங்கடவன் கூறியுள்ளார். அவரும் ஆலயம் எழுப்ப பல ஊர்களுக்கு சென்று தேடி திருப்தியற்ற நிலையில், வேங்கடமங்களம் எனும் கிராமம் மனதில் உறுத்தலாக நிற்க , ஊர் தலைவரை அணுகி தான் கண்ட கனவினை சொல்லி, இந்த ஊரே அதற்கான சிறந்த இடம் என தோன்றுவதாக கண்ணீருடன் சொல்ல, என்ன சொல்வதென்று புரியாமல், ஊர் தலைவரும் மீண்டும் ஓர் நாள் வருமாறும், அதற்குள் இதுபற்றி ஆலோசித்து முடிவு செய்வதாகவும் சொல்லி அனுப்பிவிட்டு , ஊர் பெரியவர்களிடம் இது குறித்து ஆலோசனை பெற்று , உரிய ஆவணங்களை தேடி பார்த்ததில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே “ இப்போதைக்கு அப்போதே சொல்லிவைத்தேன் “ என்பது போல வேங்கடவனுக்காக அப்போதே இப்பகுதியை ஒதுக்கி எழுதி வைத்து, குளத்தையும் உருவாக்கி வைத்து , ஊருக்கு திருவேங்கடமங்கலம் எனும் நாமகரணம் சூட்டிவைத்து சென்றது தெரியவர அதிசயித்து போயினர் ஊரார். எதன் பொருட்டு அவ்வாறு செய்தனர் என்பது தெரியவில்லை. எல்லாம் அந்த வேங்கடவனுக்கே வெளிச்சம் .
அதுவரை வேங்கடமங்கலம் எனும் கிராமத்தின் பெயரை சாதாரணமாக சொன்னவர்கள், அதன் உட்பொருள் உணர்ந்து ஆச்சரியமும், பெருமிதமும் கொண்டு, ஊரார் யாவரையும் அழைத்து, அந்த பக்தரையும் அழைத்து ,விவரத்தை விளக்கி, இங்கு, நாம் திருவேங்கடவனுக்கு கோயில் கட்டவேண்டும், அதற்கு ஊர்மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது , என்று சொன்னார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு .திருவேங்கடம் இரவி M.A, அவர்கள்.
முன் ஜென்ம கர்ம பந்தத்தினாலோ என்னவோ , திரு அர்ஜுன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு .திருவேங்கடம் ரவி M.A, அவர்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிட்டியது என்றே நினைக்கத்தோன்றுகின்றது. அவர்களின் சீரிய முயற்சியினால் , ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் 5.5 ஏக்கர் பரப்பளவுள்ள கோவில் நிலத்தில் ஏழுமலை ஆண்டவனுக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது
ஊர் பெயரிலேயே பெருமாள் இருக்கும் போது எதற்கு வெளியே தேடனும் என்று திரு வேங்கட பெருமாள் என்று வைத்து திரு வேங்கடபெருமாள் ஆலய திருப்பணி சங்கம் என்று நிர்வாக குழு ஏற்படுத்தி பணிகளை துவக்கி 15.07.2012 நந்தன ஆண்டு , ஆனி மாதம் , 13ம் தேதி , ஞாயிற்றுக்கிழமை , அன்று காலை 8.௦௦ மணி முதல் 11 மணியளவில், ரோகினி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் கோவில் நிர்மானத்திற்கு பூமி பூசை மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்வு . இறைவன் மனம் குளிர்ந்தான் என்பதை உணர்த்தும் வண்ணம் வானம் தூய நீர் தெளிக்க பூமி பூசை நடந்து முடிந்தது .
, பெருமாள் ஊர் பெயரை தனதாக்கி கொண்டதால் , அருகில் சிறு குடில் அமைத்து அதில் வேங்கடவனை திரு வேங்கட பெருமாளாக பட வடிவில் எழுந்தருளசெய்தனர்
“ அவனருளாலே அவன்தாள் வணங்கி’’ என்ற நிலையில் அன்றிலிருந்து, திருவேங்கடவன் முன்னிலையில் கோவில் பணிகள் பூசைகள் , விழாக்கள் என நடத்தப்பட்டு ஊர் மக்கள், முகமதிய , கிருஸ்துவ அன்பர்கள் மற்றும் பக்தர்கள் பலர் பொருளுதவி, நிதியுதவி அளிக்க மேலும்,உஞ்ஜவிருத்தி என்று சொல்லக்கூடிய முறையில் பல ஊர்களில் பிச்சை எடுக்கப்பட்டு பலதரப்பட்ட மக்களின் கைங்கரியத்தோடு கோவில் திருப்பணிகள் நல்லமுறையில் நடந்து கொண்டு இருந்தன
18.03.16 ஆம் தேதி ,வெள்ளிக்கிழமை , புனர்வசு நட்சத்திரத்துடன் கூடிய நன்னாளில் மூலவர் திருவேங்கடபெருமாள் , தாயார் திருவேங்கடலஷ்மி , மூலவர் திரு வேங்கட ஆண்டாள் , பெரிய திருவடியாகிய கருடாழ்வார் , சிறிய திருவடியாகிய காரியசித்தி பக்த ஆஞ்சநேயர் இவர்களுடன் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ சீனிவாச பெருமாள் ,உபய நாட்சியார்கள் ஸ்ரீதேவி ,பூதேவி உடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார், பால ஸ்ரீனிவாசமூர்த்தி மற்றும் இராமானுஜருடன் கும்பா பிஷேகம் இனிதே நடந்தேறியது என்றனர்.
. ஆழ்வார்கள் வாய், தமிழ் அமுதம் பருகியவன் , இன்று நமக்காக வந்திருக்கிறான், வந்தவனை காணாமல் இருப்போமோ !
ஆனந்தம் என்றால் மகிழ்ச்சி , ஆனந்தன் என்றால் மகிழ்ச்சியை தருபவன் என்று பொருள் , இப்போதெல்லாம் திருமலை சென்றால் வேங்கடவனை தூர நின்றே பார்க்கமுடிகிறது. அதுவும் சில நொடி துளிகள் மட்டுமே, அப்படிபட்டவன் இங்கே நமக்காக தாயாருடன் எழுந்தருளி உள்ளான் வாருங்கள் அவனை காணலாம்
உள்ளே நுழைந்ததும் தெற்கு பக்கம் வடதிசை நோக்கி நம்மை அன்போடு வரவேற்பவர் இங்கு எழுந்தருளியுள்ள காரிய சித்தி அனுமன் கூப்பிய திருகரத்தொடு ,மேல் தூக்கிய வாலோடு எழில் மிகு வடிவோடு அருள்வடிவாய் காட்சி தருகிறார் வேண்டுவோரின் நல்ல வேண்டுதல்களை நலமாய் முடித்து தருகிறார் பெருமாளுக்கு துணையாய் இங்கு இருக்கிறார். பெருமாள் பட உருவில் எழுந்தருளிய சில நாட்களில் தானும் பட உருவில் வந்து அமர்ந்து காரியத்தில் ஏற்படும் தடைகளை தகர்த்தெரிந்து விரைந்து பணிமுடிய உறுதுணையாய் இருந்ததால் காரியசித்தி பக்த ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார் .
இராம தூதனை வணங்கி மேற்கே சென்றால் எதிர்படுவது பலிபீடம் , அடுத்து மகாமண்டபம் , அதன் இடப்புறம் சென்றால் தாயார் தனி சந்நிதி. திருமலையில் தனித்து விளங்கும் பெருமாள் இங்கே தன் துணையான அலர்மேல் மங்கையாகிய பத்மாவதி தாயாரை , திரு வேங்கட லஷ்மி எனும் திருநாமத்தோடு தன் அருகில் இருக்கும் படி, விரும்பி வந்து இந்த ஊரில் சேவை சாதிக்கிறார் . இங்கு வந்தால் இருவரையும் ஒருசேர கண்ட பாக்கியம் நமக்கு. இங்கு ஒருமுறை காஞ்சி பால பெரியவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார் அப்போது தாயார் இங்கு விஷேசமான அம்சத்துடன் அமர்ந்திருப்பதாகவும் , மேலும் ஏலக்காய் மாலை தாயாருக்கு சாத்தும்படியும் சொல்லி சென்றார்.
தாயாரை வணங்கி எதிர் கண்ட படி ஏறி மகாமண்டபத்தில் நுழைந்தால் கிழக்கு பக்கத்தில் பெருமாளுக்கு நேர் எதிர் கருடாழ்வார் சந்நிதி. அவரை வணங்கி பெருமாளை பார்த்தால் காண கண்கோடி வேண்டும் கலியுக வரதனை , அவன் தாள் கண்டோருக்கு வல்வினையும் போகும். திருவேங்கடவனை உச்சி முதல் பாதம் வரை பாதாதிகேசம் என்பர் அந்த நிலையில் காணும் போது நம்மை அறியாமல் நம் கண்களில் ஆனந்த கண்ணீர் வெள்ளமென பெருக்கெடுக்கிறது. ஒருமுறை, இருமுறையென்ன ,பலமுறை பார்த்தாலும் பார்க்க பார்க்க திகட்டாத திருமேனி, நாளெல்லாம் அவன்முன்னே கிடந்தாலும் போதாது என்றே தோன்றுகிறது, அதனால் தான் குலசேகர ஆழ்வார் படியாய் கிடந்துனது பவளவாய் காண்பேனே ! என்றார். அதனால் தான் திருமலையில் பெருமாள் முன் உள்ள படி குலசேகர ஆழ்வார் படி எனப்படுகிறது. விலக மனமின்றி வெளியே வந்தோம். ஓம் நமோ நாராயணா ,கோவிந்தா ,கோவிந்தா ,கோவிந்தா என்று சொல்லி .
அப்படியே , வடக்கு பக்க படி இறங்கினால் சூடிகொடுத்த சுடர்கொடியும் திரு வேங்கட ஆண்டாளாக சுகமாய் இங்கே நிற்கின்றாள் தனி சந்நிதியில். என்னே ஒரு ஆனந்தம் , முகத்தில் ஓர் புன்சிரிப்பு .பெருமாளின் அருகினில் இருப்பதில் மிகப்பெரிய பேரானந்தமோ !
உற்சவ மூர்த்திகள், இவர்கள் முக்கிய, அதிமுக்கிய நாட்களில் வீதிஉலா கண்டருள்பவர்கள்,. ஐம்பொன்னால் ஆனவர்கள். ( ஐந்து விதமான உலோகங்களை கலந்து செய்யப்படும் திருமேனி ) பொதுவாக சுவாமிமலை , கும்பகோணம் போன்ற இடங்களில் சிலைகள் செய்வார்கள், ஆனால் இங்கோ எம்பெருமான் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் வலிய வந்து அருள்புரியும் விதமாக ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் பஞ்ச உலோகங்களில் எதோ ஒரு உலோகத்தை வாங்கி தன் திருமேனியை தானே வார்த்துக் கொண்டான் ஆல மரத்தடி நிழலில் என்றனர்
நன்னீர்குளம் என்கின்ற திருப்பாற்கடலும் , ஆலமரமும்
திருப்பாற்கடல் எப்படி வற்றாதோ, அதேபோல் இத்திருக்குளமும் வற்றி கண்டதில்லை என்கின்றனர் ஊர்மக்கள். அதேபோல் ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ஜமின் இங்குள்ள குளத்து நீரையே நோய் தீர்க்கும் மருந்தாக மக்களுக்கு அளித்து வந்துள்ளனர் அப்படிபட்ட மகத்துவம் பெற்றது இத் திருகுளம் . இவ்விடத்தின் ஆண்டுகணக்கை கூறும் விதமாய் பழமையை விளக்கும் விதமாய் உள்ளது ஆலமரம். யாணை வரும் பின்னே ,மணியோசை வரும் முன்னே ! என்பதுபோல் இறைவன் எழுந்தருளுவதற்கு முன்பே இவர்கள் எழுந்தருளி, அவனின் வருகைக்காக காத்திருந்தனர் என்று சொன்னால் மிகையாகாது.
நீண்டகால திருமணத்தடை ,குழந்தை இல்லாமை ,கல்வி தடை என பலதரப்பட்ட கோரிக் கைகளோடு வருவோருக்கு வரமளித்து நல்லாசி வழங்கும் நிலையில் அவன் தான் இவன் , இவன் தான் அவன், என்று கருதும்படியாக பெருமாள் காட்சி தருகிறார் .
புதிதாக கட்டப்பட்ட கோயில் என்றாலும் , திருமலையில் கண்ட அதே அனுபவம் இங்கே நமக்கு கிடைக்கிறது. பலவிதமான பணிகள் இங்கே நமக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.
தெய்வ சாநித்தியம் குறைவில்லாமல் எப்போதும் வளமாக இருக்க நித்திய பூசைகள் குறைவில்லாமல் நடக்கவேண்டும். அன்று அரசர்கள் இதற்காகவே கோவிலுக்கென்று நிலங்களை எழுதி வைத்தனர் , அதன் மூலம் வரும் வருவாயை கோவில் நித்திய பூசைக்கு பயன்படுத்தினர் , இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. ஆதலால் , நம்மாள் இயன்ற பணவுதவியோ , பொருளுதவியோ செய்து இறை தொண்டாற்ற வேண்டும், இங்கு இன்று நீங்கள் நிற்கின்றிர்கள் என்றால், அதற்கு யாரோ பலர் செய்த உதவியே மூலமாகும். சிறிதோ, பெரிதோ, பக்தியுடன் நீங்கள் செய்யும் செயல் உங்கள் சந்ததிக்கு வளம் சேர்க்கும். அதுமட்டுமின்றி நம் முன்னோர்கள் ஆத்மா நலம்பெறவும் உதவும் . ஆகவே ,உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் திருப்பணி சேவை செய்ய கனிவுடன் அழைக்கின்றோம். நம் செயல்கள் அனுமனைபோல் இல்லாவிட்டாலும் அணில் போல் சிறிதாவது இருக்கட்டும். இருப்பவர்கள் கொடுங்கள் , இல்லாதவர்கள் விரும்புங்கள். உங்கள் விருப்பமே இறைவனை மகிழ்விக்கும் .
நன்கொடை வழங்க விருப்பமுள்ள அன்பர்கள் " காசோலையை திருவேங்கடப்பெருமாள் ஆலைய திருப்பணி சங்கம் “ என்ற பெயருக்கு கொடுக்கவும் வங்கியில் நேரிடையாக செலுத்த விரும்புபவர்கள் INDIAN BANK, TAMBARAM BRANCH, A/C No 6101503542-ல் செலுத்தவும். நேரிடையாக தரநினைப்பவர்கள் கோயில் அலுவலகத்தை அணுகவும், அல்லது கோயில் உண்டியலில் செலுத்தவும்
Mon - Fri: 6.00 AM to 12.00 PM
Mon - Fri: 5.00 PM to 9.00 PM
Sat - Sun: 6.00 AM to 9.00 PM
Mon - Fri: 6.00 AM, 10.00 AM, 12.00 PM
Mon - Fri: 5.00 PM , 7.00 PM
Sat - Sun: 6.00 AM, 10.00 AM, 5.00 PM.
Thiruvengada Perumal, Near. Govt. School, Vengadamangalam, Chennai,
Tamil Nadu 600048